இஸ்லாத்தை அவமதித்த மற்றும் மத நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலபட அத்தே ஞானசார தேரரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க திங்கட்கிழமை (23) உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஞானசார தேரர் ஆஜராகாத காரணத்தினால் மேலதிக நீதவான் பசன் அமரசேனவினால் இந்த பிடியாணை கடந்த 19 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டது. ஞானசார தேரர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (23) ஆஜரானார்.
சஞ்சய் ஆரியதாசவின் அறிவுறுத்தலின் பேரில் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இசுரு எதிரிசிங்க, வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவிருந்த கடந்த 19ஆம் திகதி சந்தேகநபர்,உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்ததால். நீதிமன்றில் ஆஜராக முடியாமல் போனதாக தெரிவித்தார்.
அவர் மீண்டும் வைத்தியசாலையில், செவ்வாய்க்கிழமை (24) அனுமதிக்கப்படுவார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2016 ஜூலை 8, அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, இஸ்லாம் தொடர்பான அறிக்கை மத நல்லிணக்கத்தை மீறுவதாகவும், அதன்படி, குற்றவியல் சட்டத்தின் 291 (பி) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் இழைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மேலதிக நீதவான், பிடியாணையை மீள அழைப்பதுடன், சந்தேக நபரை ஜனவரி 9ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார். (P)