கனடாவின் பர்லிங்டன் (Burlington) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஹால்டன் பிராந்திய பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 வயது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:30 மணியளவில், பர்லிங்டனில் உள்ள கிரெஸ்ட்வுட் மோட்டல் (Crestwood Motel) வாகன நிறுத்துமிடத்தில் பொலிஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு கார், பொலிஸ் அதிகாரிகளை நோக்கி வேகமாக மோத வந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொலிஸ் அதிகாரி, தற்காப்பிற்காக அந்த காரை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
காரை ஓட்டி வந்த 23 வயது இளைஞர் மீது பல தோட்டாக்கள் பாய்ந்தன. அவர் உடனடியாக ஹாமில்டன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது நிலைமை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரில் ஒரு பெண் பயணயும் இருந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.
பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், இந்தச் சம்பவம் குறித்து ஒன்டாரியோவின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு (SIU) விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஐந்து புலனாய்வாளர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் மோட்டல் பகுதியில் ஆதாரங்களைத் திரட்டி வருகின்றனர்.
