சமூக நீதிக் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் போட்டி!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

சமூக நீதிக் கட்சியின் மூன்றாவது ஆண்டு பூர்த்தி மாநாடு நேற்று (04.02.2025) கொழும்பு, கலாநிதி என். எம். பேரேரா நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள், அதிதிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கட்சியின் பொருளாளர் ஹுஸ்னி ஜாபிரின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷாத் அஹ்மத் நிகழ்த்தினார். இவ்வுரையின் போது சமூக நீதிக் கட்சி, கடந்த மூன்று வருடங்களாக மக்களை அரசியல் மயப்படுத்த ஒழுங்கு செய்த மலையகம் 200 கருத்தரங்கு, 13 ஆம் திருத்தச் சட்டம் கருத்தரங்கு, பலஸ்தீன ஒருமைப்பாட்டு கண்காட்சி, நிகழ்நிலைக் காப்புச் சட்டம் கருத்தரங்கு போன்ற நிகழ்வுகளையும், பங்குபற்றிய மக்கள் போராட்டங்களையும் நினைவூட்டினார். அடுத்தாக கட்சியின் ஸ்தாபகத் தலைவர் நஜா முஹம்மத், சமூக நீதிக் கட்சி இலங்கையில் ஏன் அவசியம் என்பது குறித்தும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தோடு ஒரு ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலினூடாக அரசியலில் ஈடுபடுவது குறித்தும் உரையாற்றினார். மேலும் உரையாற்றிய கட்சியின் ஸ்தாபக தலைவர் நஜா முஹம்மத், "தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஒரு ஐந்து வருட ஆணையை வழங்கியிருக்கின்றார்கள். இல ங்கை அரசியல் வரலாற்றில் ஒரு தனிக் கட்சியாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியையும், மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் பெற்ற ஒரு கட்சியாக தேசிய மக்கள் சக்தி திகழ்கின்றது. எனவே இந்த மக்களாணையை நாங்கள் மதித்து ஐந்து வருடங்களுக்கு அவர்கள் தொடர்ந்து இந்த ஆட்சியைக் கொண்டு செல்வதற்கு நாங்கள் அனுமதிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இந்த மக்களாணையைத் தட்டிப்பறிக்கின்ற முயற்சிகளுக்கு மக்கள் பலியாகிவிடக்கூடாது அவ்வாறு செயற்படுகின்ற போது அது நாட்டிலே இன்னும் பல பிரச்சினைகளையும் சிவில் யுத்தத்துக்கும் அல்லது வன்முறைக்கும் ஜனநாயக விரோத சூழ்நிலைக்கும் அது இட்டுச் செல்லும் என்பதோடு அது நாட்டை இன்னும் பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கும் இட்டுச்செல்லும். ஆகவே அத்தகைய முயற்சிக்கு மக்கள் துணை போகக்கூடாது. அதே நேரத்தில் 76 வருடங்களாக மாறி மாறி ஆட்சி செய்த இந்த கட்சிகளுக்கு இடையிலேயே பாரிய வேறுபாடுகள் இல்லை. ஒரேவகையான அரசியலைத்தான் முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். இலங்கையில் முதன்முறையாக ஒரு இடதுசாரி சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சி ஆட்சியை முழுமையாக கைப்பற்றி இருக்கிறது. இது எமது அனுபவத்தில் முற்றிலும் வித்தியாசமானஒரு சூழ்நிலை. இந்த சூழ்நிலையை மிக ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைத்தல், மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வூட்டல், மக்களை வழிகாட்டும் அரசியல் என்பது இந்த புதிய சூழ்நிலையில் மிகவும் முக்கியமானது. அந்தப்பணியை சமூக நீதிக் கட்சி மேற்கொள்ளும்" என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் நோக்கவுரையாற்றிய கொழும்புப் பல்கலைக்கழக வரலாற்று கற்கைப் பிரிவு பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி அவர்கள், இலங்கையின் வரலாறு நெடுகிலும் அரசாங்கங்களுக்கும் மக்களுக்கும் இருந்த தொடர்பு எவ்வாறு குறைந்து வந்துள்ளது என்பது குறித்தும், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும், சமூக நீதிக் கட்சியின் அரசியல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் இங்கு உரையாற்றினார். இறுதியாக சமூக நீதிக் கட்சியின் தலைவர் அர்க்கம் முனீரின் 'கட்சியின் மூன்று வருடப் பூர்த்தி மாநாட்டுரை' இடம்பெற்றது. அவ்வுரையில் அர்க்கம் முனீர், "இன்று அரசியல் முறைமை மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்ற வாக்குறுதியோடு ஆட்சியமைத்திருக்கிறது தேசிய மக்கள் சக்தி. 2015 இல் வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அவ்ஆட்சி மாற்றத்தின் போது தகவலறியும் உரிமைச் சட்டம், 19 ஆம் திருத்தச் சட்டம் போன்ற பல மக்கள் நலன் வேலைத்திட்டங்களை கொண்டுவர நாம் பல்வேறு வழிகளில் போராடி வெற்றி பெற்றோம். 2024 இல் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தில் அவர்கள் இந்த அரசியல் முறைமை மாற்றத்தினைக் கொண்டுவருவதற்கான வேலைத்திட்டங்களில் ஈடுபடுகின்றனர். மறுபுறத்தில் கடைந்தெடுத்த இனவாதிகள் மற்றும் ஊழல்வாதிகள் எல்லாம் அவசர அவசரமாக ஒன்று சேரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு "எதிர்க்கட்சிகள் செய்யும் சதிகளில்" ஒருபோதும் சமூக நீதிக் கட்சி பங்கேற்காது. அவ்வாறு சதிகளை முறியடிக்க சமூக நீதிக் கட்சி தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இதன் அர்த்தம் அரசாங்கத்தின் மீது எமக்கு விமர்சனங்கள் இல்லை என்பதல்ல. அரசாங்கத்தின் மீது எமக்கு கடுமையான விமர்சனங்கள் உள்ளன. இந்த அரசாங்கத்தில் கபினட், Clean Sri Lanka, நீதித்துறை போன்றவற்றில் சிறுபான்மை சமூகங்களுக்கு ஏற்பட்டு தொடர் புறக்கணிப்புக்கள், பலவகைமையை உறுதிப்படுத்துவதை தீர்வாக கருதாமல் ஒரே அடையாளத்திற்குள் அனைவரையும் கொண்டுவருவதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண எடுக்கும் முயற்சிகள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் குறித்த நிலைப்பாட்டில் மாற்றுக் கருத்துக்கள் என்று பல்வேறு விமர்சனங்கள் எமக்கு இவ்வரசாங்கத்தின் மீது இருக்கின்றன. இவற்றை அரசாங்கம் கருத்திற்கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை கவனத்திற்கொள்ளும் ஒரு பொறிமுறையை கொண்டுவர வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு மக்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து ஆட்சியை ஸ்திரமாக கொண்டுசெல்ல வழிவகுக்கும்" என்று தெரிவித்தார். இதன் போது மேலும் உரையற்றிய சமூக நீதிக் கட்சியின் தலைவர் அர்க்கம் முனீர், இவ்வருடம் ஏப்ரல் மாதம் நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் சமூக நீதிக் கட்சி சுயேற்சைக்குழுக்களாகப் போட்டியிடும் என்று தெரிவித்ததோடு இத்தேர்தலில் வெற்றி இலக்குகளை அடைந்து கொள்ள அனைவரின் ஆதரவையும் வேண்டிக்கொள்டார். இவ்வுரையின் பின்னர் மாநாட்டுத் தீர்மானங்களாக 8 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டதோடு, கட்சியின் ஊடக மற்றும் கொள்கை பரப்புச் செயலாளர் அன்ஷாக் அஹமதின் நன்றியுரையோடு நிறைவுபெற்றது. (P)

Related Posts