கேரளாவில் காதலனை விஷம் கொடுத்து கொன்ற இளம்பெண்ணுக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள கோர்ட்டு கடந்த மாதம் 20-ம் தேதி தீர்ப்பளித்தது. 2-வது குற்றவாளியான நிர்மல்குமாருக்கு தடயங்களை அழிக்க முயன்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய குற்றவாளிகளுக்கு வாய்ப்பளித்த கோர்ட்டு, விசாரணை தொடர்பான ஆவணங்களை ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை தொடர்ந்து கிரீஷ்மா திருவனந்தபுரம் பூஜப்புரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், காதலனை விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் இளம்பெண் கிரீஷ்மாவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, அவரது மாமாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து கேரளா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதிகள் பி.பி. சுரேஷ் குமார் மற்றும் ஜோபின் செபாஸ்டியன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தூக்கு தண்டனை மற்றும் சிறை தண்டனை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். மேல்முறையீடு நிலுவையில் உள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்குமாறும் மனு தாரர்கள் தரப்பில் கோரி முன்வைக்கப்பட்டது. மேலும் இருவரும் தண்டணையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டில் மாநிலத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு நீதிபதிகள் கேட்டுக்கொண்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.