அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. விழாவையொட்டி தந்த பல்லக்கு, இரவில் தங்க மயில், வெள்ளி காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெறுகிறது. பாதயாத்திரையில் வரும்போது களைப்பு தெரியாமல் இருக்க முருகனை வேண்டி சரண கோஷம் எழுப்பியபடி ஆடியும், பாட்டு பாடியும் பக்தர்கள் வந்தனர். பழனி வந்த பின்பு சண்முகநதி, இடும்பன்குளத்தில் புனித நீராடினர். தொடர்ந்து திருஆவினன்குடி, பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் நெரிசலை கட்டுப்படுத்த அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டது. அதன்படி கோவில் செல்லும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து குடமுழுக்கு நினைவரங்கம், யானைப்பாதை வழியாக சென்றனர். கோவிலில் தரிசனம் முடிந்த பின்பு படிப்பாதை வழியாக கீழே இறங்கினர். மேலும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய அடிவாரத்தில் இருந்து பகுதி, பகுதியாக பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அனுப்பப்பட்டனர். இதற்கிடையே பழனிக்கு வந்த ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், முடிக்காணிக்கை செலுத்தியும் வழிபட்டனர்.