ரொறன்ரோவில் கடும் பனிப்பொழிவு நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவான மிக மோசமான பனிப்பொழிவு தற்போது நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பல இடங்களில் 25 சென்டிமீட்டருக்கு மேல் பனிப்பொழிவு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்திற்கும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் டொரன்டோவில் பதிவான அதிகூடிய பனிப்பொழிவு தற்போது பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீரற்ற கால நிலை காரணமாக பல்வேறு இடங்களில் வாகன விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பியர்சன் விமான நிலையத்தில் பணியாளர்களின் வருகை குறைவடைந்துள்ளதாகவும் இதனால் விமான நிலையத்தின் தொழிற்பாடுகளை மேற்கொள்வதில் சவால்களை எதிர் நோக்க நேரிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சில பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையத்தில் பொழியும் பனிப் படலத்தை அகற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக விமான ஓடுபாதைகளை பனி படலத்திலிருந்து மீட்பதற்கு விசேட முனைப்புகள் முன்னெடுக்கப்பட்டது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.