அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆர்டெமிஸ்-2 திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்பும் முயற்சியாக தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், கடந்த 2ஆம் தேதி ஒரியன் விண்கலத்தில் ஒரு பெண் உள்பட 4 விண்வெளி வீரர்கள் விண்ணில் செலுத்தப்பட்டனர்.
இந்த வீரர்கள் நிலவை சுற்றி ஆய்வு மேற்கொண்டதுடன், நிலவின் மறுபக்கத்தை நேரில் பார்த்தவர்களாகும் பெரும் சாதனையையும் படைத்துள்ளனர்.
ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர்கள் பயணித்த ஒரியன் விண்கலம் இன்று காலை சுமார் 5.37 மணியளவில் பூமிக்கு திரும்பியது.
3 பாராசூட்டுகளின் உதவியுடன், விண்கலம் அமெரிக்காவின் சான் டீகோ நகரம் அருகிலுள்ள பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இந்த பயணத்தின் போது, பூமியிலிருந்து சுமார் 4 லட்சத்து 6 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சென்றடைந்ததுடன், மொத்தமாக 11 லட்சத்து 2 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் விண்கலம் பயணம் செய்துள்ளது.
இந்த சாதனை, அப்போலோ 13 மேற்கொண்ட முந்தைய நீளமான பயண சாதனையையும் முறியடித்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
