மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே புதிய மோதல் ஏற்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க கடற்படையின் இரண்டு ஏவுகணைத் தகர்ப்புக் கப்பல்கள் நுழைந்ததாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த அறிவிப்பை ஈரான் ஆயுதப்படை தலைமையகம் முற்றிலும் மறுத்துள்ளது.
அமெரிக்காவின் CENTCOM வெளியிட்ட தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும், எந்த வெளிநாட்டு கப்பல்களும் அந்த நீரிணைக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை என்றும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, அமெரிக்கா தனது நடவடிக்கை கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டதாகவும், வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பான வழித்தடம் உருவாக்கப்படுவதாகவும் கூறியிருந்தது.
ஆனால் ஈரான் இந்த கூற்றை “பொய்யான தகவல்” எனக் கடுமையாக மறுத்துள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கை மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.
முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் நீரிணை குறித்து இத்தகைய முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சர்வதேச சந்தைகளிலும், பாதுகாப்பு வட்டாரங்களிலும் கவலை அதிகரித்துள்ளது.
இந்த விவகாரம் அடுத்த கட்டத்தில் பதற்றத்தை குறைக்குமா அல்லது புதிய மோதலுக்கு வழிவகுக்குமா என்பது குறித்து உலக நாடுகள் தீவிரமாக கவனித்து வருகின்றன.
