மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. சிறிது நேரத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அண்டை நாடுகளான வியட்நாம், மலேசியா, வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.நிலநடுக்கம் காரணமாக, மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. தாய்லந்து தலைநகர் பாங்காக்கில் மிகப்பெரிய கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது. புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் ஏராளமான ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மியான்மரின் மாண்டலே நகரில் உள்ள ஒரு மசூதி இடிந்து விழுந்ததில் சுமார் 20 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.