தமிழகத்தில் ஆட்சியமைப்பு தொடர்பான அரசியல் பரபரப்பு மேலும் தீவிரமடைந்துள்ளது.
விஜய தலைமையிலான தமிழக வெற்றி கழகம், 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தற்போது 113 உறுப்பினர்களின் பலத்தை பெற்றுள்ளது.
ஆனால், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் ஆட்சியமைக்க குறைந்தபட்சமாக 118 உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படுவதால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிலையில், நேற்று மற்றும் இன்று தொடர்ந்து தமிழக ஆளுநரை சந்தித்த விஜய், “தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்” என விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், முதலமைச்சராக பதவியேற்ற பிறகு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் எனவும் விஜய் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், “113 உறுப்பினர்களை மட்டும் வைத்து நிலையான அரசு அமைக்க முடியுமா?” என ஆளுநர் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட விளக்கத்தில்,
“யார் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என ஆளுநர் கருதுகிறாரோ அவரையே ஆட்சியமைக்க அழைக்க அரசியல் சாசனம் அனுமதிக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, “விஜய் பெரும்பான்மை இருப்பதை நிரூபித்தால் அடுத்த நிமிடமே ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்படும்” என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், சட்ட நிபுணர்களுடன் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும், அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான அதிகாரப் போட்டியாக இந்த சூழல் மாறியுள்ளது.
