காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தமிழக ஆளுநரின் தற்போதைய நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
தனது சமூக வலைதள பதிவில், “108 இடங்களில் வெற்றி பெற்ற தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றி கழகம் ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது ஜனநாயக உணர்வுக்கு எதிரானது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஆளுநரின் அதிகாரத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றால், ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற கட்சியையும் ஆட்சியமைக்க அழைக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், தனிப்பெரும் கட்சியின் தலைவரை அழைப்பதே அரசியல் சாசன மரபு எனவும் ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, உச்சநீதிமன்றம் பலமுறை “ஆளுநர் அரசியல் சாசன வரம்புக்குள் செயல்பட வேண்டும்” என்று தெளிவாக கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மக்களின் தீர்ப்பை மாற்றி எழுத முயற்சிப்பது மாபெரும் தவறு; தமிழ்நாட்டு மக்கள் இதை ஏற்கமாட்டார்கள்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சியமைப்பு தொடர்பான அரசியல் மற்றும் சட்டப்பூர்வ விவாதங்கள் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட நகர்வுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
