தவெகவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழக அரசியல் அதிமுகவை நோக்கி நகரும், பொறுத்திருங்கள் நல்லதே நடக்கும்; அதிமுக ஆட்சி அமையும் என புதுச்சேரி விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தவெக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இடங்களை பெற்றிராத நிலையில், அக்கட்சிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது.

இந்தச் சூழலில், தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தவெக, ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனால், ஆளுநர், விஜய்யை ஆட்சி அமைக்க இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறதா எனக் கேட்டுள்ளார். இதனால், திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற மற்ற கட்சிகளின் ஆதரவை தவெக கோரி வருகிறது.

அதிமுக கூட்டணி 53 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக தனியாக 47 இடங்களில் வென்றது. அவர்களில் சுமார் 30 சட்டமன்ற உறுப்பினர்கள், புதுச்சேரி பூரணாங்குபத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று (7) இரவு புதுச்சேரியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ள விடுதிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் சென்றனர். எடப்பாடி பழனிசாமி, தமிழக அதிமுக எம்எல்ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

விடுதியில் தங்கியுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அவர்களிடம் நல்லதே நடக்கும் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், திமுகவுடன் கண்டிப்பாக கூட்டணி கிடையாது எனவும், அனைவரும் பொறுமை காக்கவும், எம்.எல்.ஏக்கள் யாரும் புதுச்சேரியில் இருந்து புறப்பட வேண்டாம் என்றும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பான்மை பலம் இல்லாத விஜய் முட்டி மோதி இங்கே வருவார். நம் தலைமையில் ஆட்சி அமையும், பொறுத்திருங்கள் எனவும் எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தவெக தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி