புளோரிடா கடற்கரைக்கு அப்பால் கடலில் விழுந்த தனியார் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்தில் இருந்த பயணிகளை சில மணிநேரங்களுக்குள் பாதுகாப்பாக மீட்பதற்கு அமெரிக்க விமானப்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து நடவடிக்கை எடுத்த நிலையில் மீட்புப் பணிக்காக 5 மணிநேரத்திற்கும் அதிக காலம் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மீட்புப் பணியில் ஈடுபட்ட விமானப்படை ஹெலிகொப்டரின் எரிபொருள் தீருவதற்கு 5 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், இவ்வாறு அனைவரும் மீட்கப்பட்டமை ஒரு அதிசயம் என சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த மீட்புப் பணிக்குத் தலைமை தாங்கிய மேஜர் எலிசபெத் பியோவடி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், "இவர்கள் அனைவரும் உயிர் தப்பியிருப்பது உண்மையிலேயே ஒரு அதிசயம்.
பஹாமாஸ் தீவுக்கூட்டத்திலிருந்து பறந்து கொண்டிருந்த இந்த இரண்டு இயந்திரங்கள் கொண்ட 'Turboprop' ரக விமானம், புளோரிடாவின் மெல்போர்ன் கடற்கரையிலிருந்து சுமார் 80 மைல் தொலைவில் அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானம் விபத்துக்குள்ளான போது அதில் 11 பெரியவர்கள் பயணித்துள்ள நிலையில் விமானம் கடலில் விழுந்தவுடன் செயல்படத் தொடங்கிய அவசரகால சமிக்ஞை அமைப்பு மூலம் கடலோர காவல்படைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்தநிலையில், அந்த நேரத்தில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான HC-130J விமானம் உடனடியாக அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்து நிகழ்ந்து சுமார் ஐந்து மணிநேரம் வரை இந்த குழுவினர் உயிர் காக்கும் படகு ஒன்றின் உதவியுடன் கடலில் தங்கியிருந்தனர். அந்த நேரத்தில் அப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்த போதிலும், மீட்புக் குழுவினர் அவர்களைக் கண்டுபிடித்தனர்.
ஹெலிகொப்டர் மூலம் அவர்களை மீட்பதற்கு முன்னதாக உணவு, நீர் மற்றும் மேலதிக உயிர் காக்கும் கருவிகளை வான்வழியாகப் போடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
பின்னர் அனைவரும் மீட்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்காக மெல்போர்ன் ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரை சரியாகத் தெரியவில்லை என்றாலும், இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு இதற்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Font size:
Print
Related Posts
