இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் வீசிய சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இயற்கை அனர்த்தத்தில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பல ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதுடன், மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் பல பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பரேலி மாவட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாமியோரா கிராமத்தைச் சேர்ந்த நன்ஹே மியான் என்ற நபர், பலத்த காற்றிலிருந்து தப்பிக்க திருமண மண்டபத்தின் தகரத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார்.
ஆனால், புயலின் வேகம் அதிகரித்ததால், தகரத்துடன் சேர்ந்து அவரும் வானில் தூக்கி வீசப்பட்டார்.
சுமார் 300 மீட்டர் தூரம் வரை காற்றில் இழுத்துச் செல்லப்பட்ட அவர், கீழே விழுந்ததில் கை மற்றும் கால்களில் கடுமையான எலும்பு முறிவுகளுக்கு உள்ளாகியுள்ளார்.
தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தத் திகிலூட்டும் சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இயற்கையின் வலிமையை நினைவூட்டும் இந்தச் சம்பவம், மோசமான வானிலையின் போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.
