சூர்யவன்ஷி IPL வரலாற்று சாதனை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், வெறும் 15 வயதிலேயே பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி.

இந்த பருவத்தில் விளையாடிய 16 இன்னிங்ஸ்களில், 237.30 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் 776 ஓட்டங்களை குவித்த அவர், அதிக ஓட்டங்கள் எடுத்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பி விருதை கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலம், ஒரே ஐபிஎல் பருவத்தில் அதிக ஓட்டங்களும் சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டும் பதிவு செய்த கிறிஸ் கெய்லின் 2011 சாதனையை சூர்யவன்ஷி சமன் செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், இந்த தொடரில் 72 சிக்ஸர்களை விளாசிய அவர், ஒரே ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெய்லின் 59 சிக்ஸர்கள் சாதனையையும் முறியடித்துள்ளார்.

மேலும், ஒரே பருவத்தில் ‘தொடர் நாயகன்’ (MVP) மற்றும் ‘வளர்ந்து வரும் வீரர்’ (Emerging Player) ஆகிய இரு விருதுகளையும் வென்ற முதல் வீரர் என்ற புதிய வரலாற்றையும் படைத்துள்ளார்.

இதேவேளை, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளருக்கான ஊதா நிற தொப்பி விருதை, குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா வென்றுள்ளார்.

17 போட்டிகளில் விளையாடிய ரபாடா, 29 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த விருதை இரண்டாவது முறையாக வென்றுள்ளார்.

அதேநேரம், ஆர்சிபி அணியின் புவனேஷ்வர் குமார் 28 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

சூர்யவன்ஷியின் அபார திறமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், “அவர் மிகவும் தனித்துவமான வீரர். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை நகர்த்தும் அவரது மணிக்கட்டு அசைவுகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன” என பாராட்டியுள்ளார்.

அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் குஜராத் அணியின் சுப்மன் கில் 732 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்தையும், சாய் சுதர்சன் 722 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

15 வயதிலேயே ஐபிஎல் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதியுள்ள வைபவ் சூர்யவன்ஷி, எதிர்கால உலக கிரிக்கெட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி