உக்ரேன் முழுவதும் பல நகரங்களை இலக்காகக் கொண்டு ரஷ்யா இரவோடு இரவாக நடத்திய கடும் தாக்குதல்களில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டினிப்ரோ நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், 16 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் தலைநகர் கீவில் நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், குறைந்தது 29 பேர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல்களைத் தொடர்ந்து பல நகரங்களில் பெரிய அளவிலான புகை மண்டலங்கள் எழுந்ததால் மக்கள் பெரும் அச்சத்தில் தஞ்சம் தேடியுள்ளனர். உக்ரேனின் பல பகுதிகளில் வான்வழி தாக்குதல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
கடந்த காலத்தில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் ஒரு தங்கும் விடுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, இந்த புதிய தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
ரஷ்ய தரப்பில், உக்ரேனின் நடவடிக்கைகளுக்கு பதிலடி தொடரும் என முன்னதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், போர் மேலும் தீவிரமடையுமா அல்லது இருதரப்பும் சமரசப் பாதைக்கு திரும்புமா என்பது உலக நாடுகள் கவனித்து வரும் முக்கிய கேள்வியாக உள்ளது.
