இந்தியாவில் கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டல்களுக்கு எதிராகப் போராடுவதற்கும், பாதிக்கப்பட்டவர்களைக் கௌரவமான முறையில் மீள்வாழ்விற்கு உட்படுத்துவதற்கும் ஏதுவான விரிவான சட்டக் கட்டமைப்பொன்றை இந்திய உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது.
இதன்போது, வயது வந்தோரின் சுயவிருப்பத்துடனான பாலியல் தொழிலையும், மனிதக் கடத்தலையும் வேறுபடுத்தி அறிவதற்கு "சுயவிருப்பம்" என்பதே முதன்மையான காரணியாகும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
'பிரஜ்வலா' என்ற அரச சார்பற்ற நிறுவனத்தினால் 20 வருடங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே, நீதியரசர்களான ஜே. பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதன்படி, இந்திய அரசமைப்பின் 32 மற்றும் 142 ஆகிய பிரிவுகளின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, நீதியரசர்கள் அமர்வு நாடு தழுவிய ரீதியில் "பாதிக்கப்பட்டோர் பாதுகாப்புத் திட்டம்"ஒன்றை உருவாக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதன் கீழ் மீட்புப் பணிகள், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணல், மீள்வாழ்வு, சட்ட நடவடிக்கை மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மனிதக் கடத்தல் தடுப்புப் பொறிமுறைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், எதேச்சதிகாரமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னர் காவல்துறை மற்றும் மீட்புப் பணியாளர்கள் முதற்கட்ட விசாரணையொன்றை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1956ஆம் ஆண்டின் ஒழுக்கக்கேடான கடத்தல் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகள், சுரண்டல், கட்டாயப்படுத்துதல் மற்றும் கடத்தல் போன்றவற்றை அடையாளம் காண்பதிலேயே கவனம் செலுத்த வேண்டுமே தவிர, சுயவிருப்பத்துடன் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களைப் பொதுப்படையாகக் குற்றவாளிகளாகக் கருதக் கூடாது என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மனிதக் கடத்தலில் மூன்று முக்கிய கூறுகள் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், பலவந்தம், ஏமாற்றுதல் அல்லது சுரண்டல் மூலம் மனிதக் கடத்தல் இடம்பெற்றுள்ளது என்பது நிரூபிக்கப்படும் பட்சத்தில், அங்கு பாதிக்கப்பட்டவரின் "சுயவிருப்பம்" என்பது சட்ட ரீதியாகப் செல்லுபடியற்றதாகிவிடும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
இதேவேளை, சிறுவர் நீதிக்கான சட்டம் மற்றும் 'போக்சோ' சட்டம் ஆகியவற்றை மனிதக் கடத்தல் தடுப்பு நடைமுறைகளுடன் நீதிமன்றம் ஒருங்கிணைத்துள்ளது. இதற்கமைய, சிறுவர் நலக் குழுக்கள், மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவுகள், சட்ட உதவி ஆணைக்குழுக்கள் மற்றும் அரச பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றுக்கு இடையே நெருங்கிய ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான மீள்வாழ்வு உரிமை என்பது கௌரவமாக வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாகும் எனத் தெரிவித்துள்ள நீதிமன்றம், காப்பகங்களுக்கான குறைந்தபட்ச தரநிலைகள், மனநல ஆதரவு, தொழிற்பயிற்சி, இழப்பீடு மற்றும் சாட்சிகளுக்கான பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்யுமாறு பணித்துள்ளது.
அமைக்கப்பட்ட குற்றங்களை விசாரணை செய்வதற்காகத் தனியானதொரு விசேட விசாரணை நிறுவனத்தை உருவாக்குமாறு உத்தரவிட மறுத்த நீதிமன்றம், "தற்போது நடைமுறையிலுள்ள சட்டக் கட்டமைப்புகளே போதுமானவை என நாம் நம்புகிறோம்" என்று தெரிவித்தது.
மத்திய அரசாங்கம் மற்றும் அனைத்து மாநில அரசுகளின் இணக்கப்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக, இந்த வழக்கு இன்னும் மூன்று மாதங்களின் பின்னர் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
Font size:
Print
Related Posts
