களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, கல்பாத பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று மாலை ஏற்பட்ட இந்த துயர சம்பவத்தின் போது, குறித்த முதியோர் இல்லத்தில் மொத்தம் 72 வயோதிபர்கள் தங்கியிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தீப்பரவல் ஏற்பட்ட உடனேயே மீட்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இதன் மூலம் 44 முதியவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தீ விபத்தைத் தொடர்ந்து 11 முதியவர்கள் காணாமல் போயிருந்த நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன.
தேடுதல் நடவடிக்கைகளின் போது காணாமல் போன 11 பேரும் உயிரிழந்துள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், தீ விபத்தில் காயமடைந்த 8 பேர் மீட்கப்பட்டு ஹொரணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
விபத்து எவ்வாறு ஏற்பட்டது, பாதுகாப்பு நடைமுறைகளில் குறைபாடுகள் இருந்தனவா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
