நாவலப்பிட்டிவில் இன்று காலை இடம்பெற்ற துயரமான விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவரும் அவரது தாயாரும் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது வீதியோரத்தில் இருந்த பெரிய யூக்கலிப்டஸ் மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்ததே இந்த அனர்த்தத்திற்குக் காரணமாகியுள்ளது.
இன்று காலை சுமார் 6.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், ஒரு பாடசாலை மாணவன், அவரது தாய் மற்றும் மற்றொரு பெண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், முச்சக்கரவண்டியின் சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து நாவலப்பிட்டிய பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, மரத்திற்குள் சிக்கியிருந்த மூவரின் சடலங்களையும் மீட்டு நாவலப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதேவேளை, நீண்டகாலமாக சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்பட்ட இந்த யூக்கலிப்டஸ் மரத்தை அகற்றுமாறு பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாததே இந்த துயர சம்பவத்திற்குக் காரணம் எனவும் பிரதேசவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
