யோஷித பணமோசடி வழக்கு; விசாரணை நிறுத்தம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கை, மீண்டும் ஜூலை மாதம் 09ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (04) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், இந்த வழக்கின் பிரதிவாதியால் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவொன்று நேற்று (03) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதனை ஜூன் மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார்.

அன்றைய தினம் வரை இந்த வழக்கின் சாட்சியங்களை விசாரணை செய்யப்போவதில்லை என நாடாளுமன்றத் தரப்பு (முறைப்பாட்டாளர்கள்) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதற்கமைய இந்த வழக்கின் சாட்சி விசாரணைகள் இன்றி வழக்கை ஒத்திவைக்குமாறும் அவர் நீதிமன்றத்திடம் கோரினார்.

இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைக்கும் வரை இந்த வழக்கை ஜூலை மாதம் 09ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, அன்றைய தினம் சாட்சியாளர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டார்.

730 இலட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய ஐந்து காணித் துண்டுகளை முறையற்ற வழிகளில் கையகப்படுத்தியதன் மூலம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளதாகக் கூறி சட்டமா அதிபரால் யோஷித ராஜபக்சவுக்கு எதிராக இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி