கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் அருகே அடுப்புட்டி பகுதியில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
40 வயதுடைய பினீஷ் என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குன்னங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரது வீட்டிற்கு சோதனை நடத்த சென்றனர்.
போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்த பினீஷ், வீட்டின் சமையலறையில் அடுப்பில் வெந்து கொண்டிருந்த பிரஷர் குக்கருக்குள் கஞ்சா இருந்த பிளாஸ்டிக் பையை மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் போலீசார் முழு வீட்டையும் சோதனை செய்தும் ஆரம்பத்தில் எந்த கஞ்சாவும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அடுப்பில் இருந்த பிரஷர் குக்கர் தொடர்ந்து விசில் அடித்துக் கொண்டிருந்தது. பின்னர் கஞ்சா வாசனையும் வந்தது.
சந்தேகம் அடைந்த போலீசார் அந்த குக்கரை திறந்து பார்த்தபோது, சாதத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 401 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து பினீஷ் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
