ஈக்வடார் நாட்டின் முக்கிய மீன்பிடி மையங்களில் ஒன்றான மாண்டா துறைமுகத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், 20-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் எரிந்து சேதமடைந்துள்ளன.
நாட்டின் மிகவும் பரபரப்பான மீன்பிடித் துறைகளில் ஒன்றாக விளங்கும் மாண்டா துறைமுகத்தில், முதலில் ஒரு படகில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த தீ வேகமாக அருகில் இருந்த பல படகுகளுக்கும் பரவி பெரும் விபத்தாக மாறியது.
சமூக வலைதளங்களில் வெளியான காட்சிகளில், பல படகுகள் தீயில் கருகி எரிவதும், துறைமுகப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்திருப்பதும் காணப்படுகிறது. தீ பரவிய நேரத்தில் பல வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் குறைந்தது இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், அவர்களின் உடல்நிலை குறித்து மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
தீயால் ஏற்பட்டுள்ள மொத்த சேதம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், துறைமுகப் பகுதி முழுமையாக பாதுகாப்பானதாக அறிவிக்கப்பட்ட பிறகு, தீ விபத்திற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசிபிக் கடற்கரையில் அமைந்துள்ள மாண்டா, உலகின் முக்கிய டூனா மீன் பிடிப்பு மையங்களில் ஒன்றாக கருதப்படுவதால், இந்த சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
