தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும், “இயக்குநர் இமயம்” எனப் போற்றப்பட்ட பாரதிராஜா அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக தனது 84ஆவது வயதில் காலமானார்.
சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.
1977ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தனது முதல் படத்திலேயே ஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி ஆகிய முன்னணி நட்சத்திரங்களை இயக்கி பெரும் கவனம் பெற்றார்.
கிராமிய வாழ்க்கையை மையமாகக் கொண்டு பல வெற்றிப்படங்களை உருவாக்கிய பாரதிராஜா, தமிழ் சினிமாவில் தனித்துவமான பாணியை உருவாக்கிய இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல திரைப்படங்கள் அவரது சினிமா பயணத்தின் மைல்கற்களாக அமைந்தன.
மேலும், நடிகைகள் ராதிகா சரத்குமார், ராதா உள்ளிட்ட பலரின் திரைப்பயணத்தில் முக்கிய பங்காற்றியவராகவும் பாரதிராஜா அறியப்படுகிறார்.
இயக்குநராக மட்டுமன்றி, அண்மைக் காலங்களில் நடிகராகவும் பல படங்களில் நடித்த பாரதிராஜா , திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுஷுக்கு தாத்தாவாக நடித்த கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றிருந்தார்.
தமிழ் திரையுலகில் அழியாத தடம் பதித்துள்ள பாரதிராஜா அவர்களின் மறைவு, திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
