ஹார்முஸ் நீரிணை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன அப்பாச்சி ரகஉலங்குவானுர்தியை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைத்தள பதிவில் கருத்து வெளியிட்ட டிரம்ப், ஹார்முஸ் நீரிணைக்கு மேல் பறந்துகொண்டிருந்த அமெரிக்க உலங்குவானுர்தி மீது ஈரானியப் படைகள் தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், உலங்குவானுர்தியில் இருந்த இரு விமானிகளும் எந்தக் காயங்களுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலை அமெரிக்கா சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது என்றும், இதற்கு தகுந்த பதிலடி வழங்கப்படும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் விபத்துக்குள்ளான உலங்குவானுர்தியில் இருந்த விமானிகள், அமெரிக்க ஐந்தாவது கடற்படையின் கீழ் செயல்படும் கடற்பரப்பு ட்ரோன் உதவியுடன் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடலில் விழுந்த இராணுவ வீரர்களை ட்ரோன் தொழில்நுட்பத்தின் மூலம் வெற்றிகரமாக மீட்டது அமெரிக்க இராணுவ வரலாற்றில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், உலங்குவானுர்தியை வீழ்ச்சிக்கான காரணம் குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை இன்னும் அதிகாரப்பூர்வ விசாரணை அறிக்கையை வெளியிடவில்லை.
எனினும், இந்த சம்பவத்தை ஈரானின் நேரடி தாக்குதலாக டொனால்ட் ட்ரம்ப் வர்ணித்திருப்பது, ஏற்கனவே பதற்றமடைந்துள்ள ஈரான் அமெரிக்க உறவுகளில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
