அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அப்பாச்சி ரக உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்ததாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல்களை தடுக்க அந்த நாடுகள் தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகளை செயல்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, ஜோர்டான் நாட்டின் அஸ்ராக் விமானத் தளத்தை நோக்கி ஏவப்பட்ட ஐந்து ஏவுகணைகள் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஜோர்டான் ராணுவம் அறிவித்துள்ளது. இந்த தாக்குதல்களால் உயிரிழப்போ அல்லது பாரிய சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரானின் கெஷ்ம் தீவு மற்றும் பண்டார் அப்பாஸ் உள்ளிட்ட தெற்கு கடற்கரைப் பகுதிகளில் வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி , “பாதுகாப்பாக இருக்க விரும்பினால் எங்கள் பிராந்தியத்தை விட்டு வெளியேறுங்கள்” என அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மறுபுறம், தங்களின் உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான பதிலடி நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சூழ்நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதுடன், உலக நாடுகள் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
