சங்கீத்சனை விடுவிக்குமாறு கோரி கொழும்பில் போராட்டம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய உள்ளடக்கத்தைக்கொண்ட எழுச்சிப்பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசைப் பாடகர் கணேஷ்குமார் சங்கீத்சன் (24) பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் வெளியிட்டிருப்பதுடன், பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டம் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து பயங்கரவாதத்டைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்வதுடன், அச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி புதன்கிழமை (10) பி.ப 3.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகக் கவனயீர்ப்புப்போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தன.  

இப்போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த சிவில் சமூகப்பிரதிநிதிகள் 'அரச பயங்கரவாதத்திலிருந்து மக்களைக் காப்பது யார்?', 'தேசிய மக்கள் சக்தி அரசே, தேர்தலை வாக்குறுதிகளை நிறைவேற்று', 'பயங்கரவாதத்தடைச்சட்டதை நீக்கு', 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை மீளப்பெறு', 'பயங்கரவாதச் சட்டங்கள் வேண்டாம்', 'தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வாக்குறுதியை மீறிவிட்டது', 'கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மீது கைவைப்பதை நிறுத்து' என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதுடன் பாடகர் சங்கீத்சனை விடுவிக்குமாறு வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.

இப்போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல், 'பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவோம் என்பது தற்போதைய அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியாகும். ஆனால் அவ்வாக்குறுதிக்கு முரணாக அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தை விட மிகமோசமானதாகும்' எனச் சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் கைதுசெய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த அவர், சங்கீத்சனை உடனடியாக விடுவிக்கும் அதேவேளை, பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Related Posts
©   Thedipaar

ஹோர்முஸ் பதற்றம்