அமெரிக்காவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே புதிய இராஜதந்திர பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், இந்தியப் பணியாளர்கள் பயணித்ததாகக் கூறப்படும் எண்ணெய் கப்பல் மீதான தாக்குதல் சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தகவல்களின்படி, ஓமன் கடற்கரைக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த  'எம்/டி செட்டபெல்லோ'  (‘M/T Settebello’) என்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

அந்தக் கப்பலில் 24 இந்திய பணியாளர்கள் இருந்ததாகவும், தாக்குதலுக்கு பின்னர் 21 பேர் மீட்கப்பட்ட நிலையில், 3 பேரைத் தேடும் பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன்  நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம், உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க தரப்பின் தகவலின்படி, இராணுவ உத்தரவுகளுக்கு இணங்கத் தவறியதால் கப்பலின் இயந்திரப் பகுதி இலக்கு வைத்து தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, வர்த்தகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

மேலும், புதுடெல்லியில் உள்ள அமெரிக்க உயர்மட்டத் தூதரக அதிகாரியை நேரில் அழைத்து இந்தியா தனது உத்தியோகபூர்வ எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் 13 அன்று ஈரானிய எண்ணெய் போக்குவரத்துக்கு எதிராக இந்த முற்றுகை நடவடிக்கை தொடங்கப்பட்டதில் இருந்து, அமெரிக்கப் படைகளால் செயலிழக்கச் செய்யப்படும் எட்டாவது கப்பல் இதுவாகும்.

இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், பிராந்திய பாதுகாப்பு மற்றும் சர்வதேச கடற்போக்குவரத்து குறித்த கவலைகள் மேலும் அதிகரித்துள்ளன.


 

Related Posts
©   Thedipaar

ஹோர்முஸ் பதற்றம்