போலி உரிமத்துடன் 17 ஆண்டுகள் கேப்டனாக

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கனடா நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான  ஏர் கனடாவில் போலி ஆவணங்களை பயன்படுத்தி 17 ஆண்டுகளாக கேப்டனாக பணியாற்றியதாகக் கூறப்படும் 59 வயதுடைய ஜெப்ரி வால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘புராஜெக்ட் இகாரஸ்’ என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கனடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை, போயிங் 767, 777 மற்றும் 787 போன்ற நவீன பயணிகள் விமானங்களை இயக்கிய அவர், 900-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணங்களில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

விசாரணைகளின் படி, கேப்டன் பதவிக்குத் தேவையான உயர்நிலை உரிமத்தை அவர் பெறவில்லை என்றும், அதற்குப் பதிலாக போலி ஆவணங்களை பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற வழக்கமான தகுதி மதிப்பீட்டு சோதனையின் போது அவரது ஆவணங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

தன்னுடைய அசல் உரிமங்கள் திருடப்பட்டதாக போலிப் புகார் அளித்து தப்பிக்க முயன்றதாகவும், பின்னர் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜூன் முதலாம் தேதி கைது செய்யப்பட்ட ஜெப்ரி வால் மீது மோசடி, போலி ஆவணப் பயன்பாடு மற்றும் விசாரணையைத் திசைதிருப்புதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனினும், அவர் விமானம் இயக்குவதற்கு முற்றிலும் தகுதியற்றவர் அல்ல என்றும், வர்த்தக விமானப் பைலட்டாக சட்டபூர்வ தகுதி பெற்றிருந்தபோதிலும், கேப்டன் பதவிக்குத் தேவையான குறிப்பிட்ட உயர்நிலை அனுமதிப்பத்திரம் அவரிடம் இல்லாததே இந்த வழக்கின் மையப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது.

Related Posts
©   Thedipaar

ஹோர்முஸ் பதற்றம்