இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ‘ஏ’ அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்தியா ‘ஏ’ அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி இலங்கை ‘ஏ’ அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இன்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா ‘ஏ’ அணி, 49 புள்ளி 2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ஓட்டங்களை குவித்தது.
பதிலுக்கு களமிறங்கிய இலங்கை ‘ஏ’ அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 265 ஓட்டங்களைப் பெற்று போட்டியை சமநிலைக்குக் கொண்டு வந்தது.
இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.
சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் 17 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியால் 10 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இலங்கை அணிக்காக சூப்பர் ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மாதுளன், துல்லியமான பந்து வீச்சின் மூலம் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை முறியடித்து அணிக்கு மறக்க முடியாத வெற்றியைத் தேடித்தந்தார்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை ‘ஏ’ அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இதற்கிடையில், போட்டி முடிந்த பின்னர் இலங்கை வீரர் விஷன் ஹாலம்பேஜ் மற்றும் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி இடையே பதற்றமான வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சூப்பர் ஓவர் த்ரில்லரில் கிடைத்த இந்த வெற்றி, இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
