அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் அமைந்துள்ள எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட B-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் ரக குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணித்த எட்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.
அணு மற்றும் வழக்கமான குண்டுகளை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட, எட்டு இயந்திரங்களுடன் இயங்கும் இந்த போர் விமானம், ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் இருந்தவர்கள் அரசுப் பொதுமக்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் இராணுவத்தினர் அடங்கிய குழுவைச் சேர்ந்தவர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரேடார் மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான வழக்கமான சோதனைப் பறப்பிற்காக விமானம் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தின் வான்வழிப் படங்களை ஆய்வு செய்த விமானப்படை கர்னல் ஜேம்ஸ் ஹேய்ஸ், விமானம் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும், யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
