ஆங்கிலக் கால்வாய் கடற்பரப்பில் பயணித்த ரஷ்யாவின் ‘நிழல் கப்பற்படைக்கு’ சொந்தமானதாகக் கூறப்படும் எண்ணெய் எரிபொருள் கப்பல் ஒன்றை பிரித்தானிய பாதுகாப்புப் படையினர் இடைமறித்துள்ள சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
‘ஸ்மைர்டோஸ்’ என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த கப்பல், பிரித்தானியாவின் விசேட பாதுகாப்பு நடவடிக்கையின் போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கையில் பிரித்தானிய ரோயல் மரைன் கொமண்டோக்கள், தேசிய குற்றவியல் முகவர் அமைப்பின் அதிகாரிகள் மற்றும் ரோயல் விமானப்படை இணைந்து செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஆறு மணித்தியாலங்கள் நீடித்த கூட்டு விசேட நடவடிக்கையின் பின்னர், குறித்த கப்பல் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் ‘ நிழல் கப்பற்படை’ , சர்வதேச தடைகளை மீறி எரிபொருள் மற்றும் எண்ணெய் போக்குவரத்தில் ஈடுபடுவதாக மேற்கத்திய நாடுகள் நீண்டகாலமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
இடைமறிக்கப்பட்ட ‘ஸ்மைர்டோஸ்’ கப்பல் தற்போது இங்கிலாந்தின் தெற்கு கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கப்பலின் பயண நோக்கம் மற்றும் சரக்கு தொடர்பான விவரங்களும் ஆராயப்பட்டு வருகின்றன.
ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், இந்த நடவடிக்கை சர்வதேச கடல்சார் பாதுகாப்பு விவகாரங்களில் புதிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
