பாகிஸ்தான் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் வெளிப்படையாக தெரிவித்திருப்பது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் பேசிய அவர், பாகிஸ்தானின் அணுகுமுறைகள் மற்றும் அந்நாட்டு தலைவர்களின் கருத்துக்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
“பாகிஸ்தானையும், பாகிஸ்தானியர்களையும் நாங்கள் நம்புவதில்லை. பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சரின் யூதர்களுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை” என்று ருவன் அசார் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப், “இஸ்ரேல் மனிதகுலத்தின் சாபம்” என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு இஸ்ரேல் தரப்பும் அப்போது கடுமையாக எதிர்வினையாற்றியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் முக்கிய மத்தியஸ்தப் பங்காற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அமைதி ஒப்பந்தம் இறுதியானதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்ட பதிவில், கத்தார், சவுதி அரேபியா மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இஸ்ரேல் தூதரின் இந்த கருத்து, பாகிஸ்தான் - இஸ்ரேல் உறவுகள் மற்றும் மேற்காசிய அரசியல் சூழல் குறித்து புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.
