அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல் காணியொன்றில் இன்று புதன்கிழமை (17) அகழ்வுப் பணிகள் நடைபெற்றன.
அக்காணியில் பக்கோ இயந்திரம் மூலம் மண் அகழப்பட்டது. எனினும், அந்த இடத்தில் எந்தவொரு தடயப் பொருளும் கிடைக்காததைத் தொடர்ந்து, அகழ்வுப் பணி நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், நீதிமன்ற உத்தரவுக்கமைய இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் இக்காணியின் நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து மறைத்து வைத்திருந்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் இந்த அகழ்வு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
காணி அமைந்திருக்கும் குறித்த பகுதியில் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருந்ததாகவும் அப்பகுதி, அன்றைய நாட்களில் புலிகளின் மார்க்கமாக அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் தலைமையில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இன்று காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தொடர்ந்து நடைபெற்ற அகழ்வுப் பணிகளின் போது, எந்தவொரு ஆயுதமோ, தங்கமோ அல்லது விசாரணைக்கு உதவும் பொருட்களோ கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, மேலதிக ஆதாரங்கள் எதுவும் கிடைக்காத காரணத்தால் அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
