இது இறுதி ஒப்பந்தம் அல்ல!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட அமைதி ஒப்பந்தம் இன்னும் இறுதியானதல்ல என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நீடித்து வந்த பதற்றம் மற்றும் போர் சூழ்நிலைக்கு முடிவுகட்டும் வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே புரிந்துணர்வு அடிப்படையிலான அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தம் எதிர்வரும் 19ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் கையெழுத்திடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் இறுதி வடிவம் குறித்து டிரம்ப் முக்கிய கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் போது எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா எல்-சிசியுடன் இணைந்து ஊடகங்களை சந்தித்த டிரம்ப், “இது இறுதி ஒப்பந்தம் அல்ல; ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே” என்று தெரிவித்தார்.

மேலும், ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் தமக்கு திருப்தி அளிக்காவிட்டால் அல்லது ஈரான் ஒப்பந்தத்தின் படி செயல்படத் தவறினால், மீண்டும் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்தார்.

“ஒப்பந்தம் எனக்கு ஏற்றதாக இல்லாவிட்டாலோ அல்லது அவர்கள் சரியாக நடந்து கொள்ளாவிட்டாலோ, மீண்டும் தாக்குதல்களை தொடங்குவோம். தேவையானால் குண்டுகளை வீசுவோம்” என்று டிரம்ப் கடுமையாக தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் மிகவும் வலுவானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இந்த ஒப்பந்தத்தின் முழுமையான விவரங்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் அது மிகவும் வலுவான ஒப்பந்தமாக இருக்கும்” என்றும் டிரம்ப் நம்பிக்கை வெளியிட்டார்.

மூன்றரை மாதங்களாக நீடித்து வந்த மோதல்களுக்கு பின்னர் உருவாகியுள்ள இந்த ஒப்பந்தம், மத்திய கிழக்கில் நிலையான அமைதியை ஏற்படுத்துமா என்ற கேள்வி சர்வதேச அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

Related Posts
©   Thedipaar

ஹோர்முஸ் பதற்றம்