ஈரான் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், தமக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக வெளியான செய்திகளை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஈரான் விவகாரம் தொடர்பில் இருவருமே "அணு ஆயுதங்கள் இல்லாத ஈரான்" என்ற ஒரே இலக்கைத்தான் கொண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஜனாதிபதி ட்ரம்பை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக அடுத்த திங்கட்கிழமை தாம் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது ஈரானுடன் எட்டப்பட்டுள்ள 60 நாள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, ஒரு நீண்ட கால போர்நிறுத்த ஒப்பந்தமாக மாற்றுவதற்கு டொனால்ட் ட்ரம்ப் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வரும் அதேவேளை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதற்குத் தயாராக இருக்கும் பின்னணியிலேயே இந்த விளக்கம் வெளியாகியுள்ளது.
இதேவேளை, ஈரானிய முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வு குறித்துப் பேசிய நெதன்யாகு, அங்கு திரண்டிருந்தவர்கள் அமெரிக்காவிற்கு மரணம் என்று முழக்கமிட்டதுடன் நின்றுவிடாமல், ட்ரம்பைக் கொல்லுங்கள் என்றும் கோஷமிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய அமெரிக்க எதிர்ப்பு கோஷங்களை இஸ்ரேலில் ஒருபோதும் கேட்க முடியாது என்று தெரிவித்த நெதன்யாகு, அமெரிக்காவிற்கு உலகில் எங்குமே இல்லாத மிகச் சிறந்த மற்றும் உண்மையான நட்பு நாடு இஸ்ரேல் மட்டும்தான் என்பதை மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.
Font size:
Print
Related Posts
