இந்தியாவின் மும்பை நகரில் நான்கு மாடிக் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், ஐந்து குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த துயரச் சம்பவம் மும்பையின் மான்கூர்டு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களில் நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பிருஹன் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கனமழை காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம் என்றும், விபத்துக்குள்ளான கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கிய இரண்டு வயது நபியா, ஆறு வயது நிஹால், ஏழு வயது அலியா, ஏழு வயது முனாஃப், பதினான்கு வயது முஸ்கான் மற்றும் 32 வயதுடைய சோனி ஆகியோர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அவர்கள் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
மேலும், காயமடைந்த ஒருவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
