ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள், தலைநகர் தெஹ்ரானில் இரண்டாவது நாளாகவும் பெரும் பதற்றத்திற்கு மத்தியில் நடைபெற்று முடிந்துள்ளன. கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு ராணுவத் தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது இறுதிச் சடங்குகள் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தெஹ்ரானில் நடைபெற்ற இரண்டாவது நாள் இறுதி அஞ்சலி நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் பேசிய பிரபல ஈரான் கவிஞர் ரசூலி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகக் கடுமையான முழக்கங்களை எழுப்பினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு இந்த உலகம் இனி உகந்த இடமாக இருக்காது என்று எச்சரித்த அவர், உலகின் மிகக் கேவலமான நபர் இன்னமும் ஏன் உயிருடன் இருக்கிறார் என்றும், டிரம்பிற்கு உடனடியாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்தார். இவரின் இந்தப் பேச்சு அங்கிருந்த ஈரானிய மக்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியதோடு, டிரம்ப் மற்றும் நெதன்யாகுவை பழிவாங்கக் கோரும் பதாகைகளும் அங்கு பரவலாகக் காணப்பட்டன.
இந்த அஞ்சலி கூட்டத்தில் கமேனியின் மகன்களான மசூத், மேசம், மொஸ்தபா மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இருப்பினும், படுகொலை செய்யப்படுவார் என்று இஸ்ரேல் விடுத்துள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக, ஈரானின் புதிய உச்ச தலைவரான அயதுல்லா மொஜ்தபா கமேனி பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதேவேளை, கமேனியின் இறுதிச் சடங்கு குறித்துப் பேசியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாம் நினைத்தால் ஒரேயொரு தாக்குதலில் ஈரானின் எஞ்சியிருக்கும் ஒட்டுமொத்த தலைமையையும் ஒழித்துவிட முடியும் என்றும், ஆனால் அதற்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்த யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால் அதைச் செய்யப் போவதில்லை என்றும் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தடுத்த நிகழ்வுகளாக கமேனியின் உடல் ஈராக்கில் உள்ள புனித நகரங்களான கர்பலா மற்றும் நஜாப் ஆகிய இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, வரும் 9 ஆம் தேதி அவரது சொந்த ஊரான மஷாத் நகரில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Font size:
Print
Related Posts
