சீனாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை, புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவால் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த பேரிடரின் மத்தியில், வெள்ளத்தில் மூழ்கிய பண்ணை ஒன்றிலிருந்து சுமார் 900 பாம்புகள் தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அச்சமும் பதற்றமும் நிலவுகிறது.
கன்சு மாகாணத்தின் லோங்னான் பகுதியில் அதிகாலை ஏற்பட்ட மண்சரிவில் பல வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில் 33 பேர் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளில் இதுவரை 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஹூபெய் மாகாணத்தில் வீசிய சூறாவளி மற்றும் இடி, மின்னல் தாக்குதல்களில் மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.
சூறாவளியால் 4 ஆயிரத்து 800-க்கும் அதிகமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
இதனுடன், மற்றொரு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் பல பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
