ஒமான் கடற்கரை அருகே ஜி.எப்.எஸ். கேலக்ஸி என்ற வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவலின்படி, கப்பலில் இருந்த 11 இந்தியர்களில் 10 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.
ஒமானில் உள்ள இந்திய தூதரகம், அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும், இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஒமான் அரசுக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பிராந்தியத்தில் வணிகக் கப்பல்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள் மிகுந்த கவலைக்குரியவை என்றும், பதற்றத்தை உடனடியாகத் தணித்து, பேச்சுவார்த்தைகள் மூலம் நிலையான தீர்வை எட்ட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளை மையமான சென்ட்காம் வெளியிட்ட தகவலின்படி, சைப்ரஸ் கொடி ஏந்திய ஜி.எப்.எஸ். கேலக்ஸி கப்பல், ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலால் கப்பலில் தீப்பற்றி, இயந்திர அறை கடுமையாக சேதமடைந்ததால் பயணத்தைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பணியாளர்களில் ஒருவரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரானில் உள்ள 140 இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக சென்ட்காம் தெரிவித்துள்ளதால், மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
Font size:
Print
Related Posts
