பிரித்தானிய அரசியலில் புதிய திருப்பம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிரித்தானியாவில் ஆளும் தொழிற்கட்சியின் புதிய தலைவராக, 'வடக்கின் ராஜா' என அன்போடு அழைக்கப்படும் அண்டி பர்ன்ஹாம் நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் திங்கட்கிழமை (20) அவர் பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஒரு தசாப்த காலத்தில் பிரித்தானியா காணப்போகும் 7 ஆவது பிரதமர் இவராவார். தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மரின் செல்வாக்கு சரிவடைந்ததைத் தொடர்ந்து, அவர் பதவி விலகியதைத் தொடர்ந்தே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

56 வயதான அண்டி பர்ன்ஹாம், கடந்த 2017 முதல் 2026 வரை கிரேட்டர் மன்செஸ்டர் பகுதியின் மேயராகப் பணியாற்றினார். மன்செஸ்டர் பிராந்தியத்தின் நலன்களுக்காகவும், லண்டன் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்திற்கு எதிராகவும் அவர் காட்டிய தீவிரமே அவருக்கு 'வடக்கின் ராஜா' என்ற பட்டப்பெயரை ஈட்டித் தந்தது.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மேக்கர்பீல்ட் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று அவர் மீண்டும் பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

தொழிற்கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட ஒரே வேட்பாளர் இவராவார். பாராளுமன்ற உறுப்பினர்களின் அமோக ஆதரவைப் பெற்ற இவரை, இன்றையதினம் நடைபெறும் கட்சியின் விசேட மாநாட்டில் முறைப்படி தலைவராக அறிவிக்கவுள்ளனர்.

அண்மைய மாதங்களில் பிரித்தானியாவில் தீவிர வலதுசாரி மற்றும் குடியேற்ற எதிர்ப்பு கொள்கைகளைக் கொண்ட நைஜல் பரேஜின் 'ரிபோர்ம் யூகே' கட்சி கருத்துக்கணிப்புகளில் முதலிடத்தைப் பிடித்து அசுர வளர்ச்சி கண்டு வருகிறது.

தொழிற்கட்சியால் புறக்கணிக்கப்பட்டதாக உணரும் கிராமப்புற மற்றும் பின்தங்கிய தொழில்துறை நகரங்களைச் சேர்ந்த மக்கள் ரிபோர்ம் கட்சிக்கு ஆதரவாக மாறிவருகின்றனர்.  2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த பொதுத்தேர்தலில் தங்களது தொகுதிகளை இழக்க நேரிடும் என அஞ்சிய தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், ரிபோர்ம் கட்சியின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஆளுமை பர்ன்ஹாம் மட்டுமே என நம்பி அவரைத் தலைவராக்கியுள்ளனர்


அடுத்த பொதுத்தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலமே உள்ளது. அதற்குள் பர்ன்ஹாம் தனது நீண்டகால பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தி, மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.  

நாட்டின் மந்தமான பொருளாதார வளர்ச்சி, உயர்ந்து வரும் கடன் சுமை மற்றும் நலிவடைந்துள்ள பொதுச் சேவைகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டிய சவால் அவருக்குக் காத்திருக்கிறது.  திங்கட்கிழமை பிரதமராகப் பொறுப்பேற்றவுடன் அவர் அறிவிக்கவுள்ள புதிய அமைச்சரவை மற்றும் அவரது கொள்கை முடிவுகளை உற்றுநோக்க பிரிட்டன் மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை