கெஷ்ம் தீவு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் உயிரிழந்த சம்பவங்களுக்கு, அமெரிக்கா அதற்கான விலையைச் செலுத்த வேண்டியிருக்கும் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கெஷ்ம் தீவில் ஒரு தம்பதியினரும், ஒரு குழந்தையும் உயிரிழந்த சம்பவத்தையும், மினாப் மற்றும் லமெர்ட் பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களையும் தொடர்ந்து அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஈரான் தரப்பின் தகவலின்படி, போரின் முதல் நாளில் தெற்கு ஈரானின் மினாப் நகரில் அமைந்திருந்த ஆரம்பப் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்ததாகவும், அதே நாளில் லமெர்ட் நகரில் உள்ள விளையாட்டு அரங்கம் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பதிவில் கருத்து வெளியிட்ட காலிபாஃப், "போர்க்களத்தில் சந்திக்கும் தோல்விகளை ஈடுகட்ட அப்பாவி மக்களின் இரத்தத்தைச் சிந்த வைப்பதே அமெரிக்காவின் நோக்கமாக உள்ளது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், "இதற்கான விலையை அவர்கள் கட்டாயம் செலுத்துவார்கள்" என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தப் பின்னணியில், மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் சர்வதேச அளவில் எழுந்துள்ளது.
Font size:
Print
Related Posts
