2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய விசேட உயர்நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகை தொடர்பான தீர்ப்பே இன்று வழங்கப்பட்டது.
இந்த வழக்கில், 2022 ஆம் ஆண்டு இரு பிரதிவாதிகளும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டிருந்தனர். எனினும், அந்தத் தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், விடுதலைத் தீர்ப்பை இரத்து செய்து வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கில், பெரும்பான்மைத் தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம், 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
2019 ஏப்ரல் 20 ஆம் தேதி மாலை, மறுநாள் ஈஸ்டர் ஞாயிறன்று தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தெளிவான புலனாய்வுத் தகவல் முன்னாள் காவல்துறைமா அதிபருக்கு வழங்கப்பட்டிருந்த போதிலும், தாக்குதலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டது.
நாட்டின் காவல்துறைமா அதிபராக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய கடமையை நிறைவேற்றத் தவறியதன் விளைவாக, 268 பேர் உயிரிழந்ததுடன் 586 பேர் காயமடைந்தனர் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதன் அடிப்படையில், குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக பெரும்பான்மை நீதியரசர்கள் அறிவித்தனர்.
அதேவேளை, சிறுபான்மைத் தீர்ப்பை வழங்கிய நீதியரசர், அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டு, பிரதிவாதியை விடுவிக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார்.
இந்நிலையில், இதே வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிரான தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Font size:
Print
Related Posts
