இஸ்ரேலுக்கு விரையும் அமெரிக்க விமானங்கள்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையிலும், இஸ்ரேலுக்கு அமெரிக்க இராணுவ விமானங்களின் வருகை தொடர்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திற்கு மேலும் பத்து அமெரிக்க வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்கள் வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் அங்கு நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்களின் மொத்த எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஏற்கனவே விமான நிலையத்தில் இருந்த 30 விமானங்களுடன் இந்த புதிய விமானங்களும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கத்தை விட அதிக அளவில் இராணுவ விமானங்கள் வருகை தந்துள்ளதால், விமான நிலையத்தின் செயல்பாட்டுச் சுமை அதிகரித்துள்ளதாகவும், பயணிகள் விமான சேவைகளில் சுமார் இரண்டு மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் நிலையில், மேலும் விமானங்கள் வந்தால் தாமதங்கள் அதிகரிக்கக்கூடும் என இஸ்ரேல் விமான நிலைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதற்கு முன்னர், அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்து, சிலவற்றை இஸ்ரேலிய விமானப்படைத் தளங்களுக்கு மாற்றுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போதைய புதிய விமான வருகைகள் மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பு சூழல் மீண்டும் பதற்றமடைவதற்கான அறிகுறியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை