நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் அதனால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹட்டன் பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில், 47, 58 மற்றும் 83 வயதுடைய மூன்று பெண்களும், 22 வயதுடைய இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், வட்டவளை ஞானானந்தகம பகுதியில் மகாவலி கங்கைக்கு குறுக்காக உள்ள பாலத்தின் மீது பயணித்த 53 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
நாவலப்பிட்டி சோலங்கந்த, ஜனஉதான கிராமத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல், நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளை பகுதியில் வீடு ஒன்றின் மீது ஏற்பட்ட மண்சரிவில் மேலும் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், கினிகத்தேனை அம்பகமுவ பகுதியில் 45 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சீரற்ற வானிலை காரணமாக மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கனமழை மற்றும் வெள்ள அபாயத்தை கருத்தில் கொண்டு, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் அறிவித்துள்ளார்.
Font size:
Print
Related Posts
