பிள்ளையான் உட்பட 3 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மட்டக்களப்பில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரை எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு இன்று காணொளி வழியாக இடம்பெற்ற நீதிமன்ற விசாரணையின் போது வழங்கப்பட்டது.

கடந்த 2008 ஆம் ஆண்டு கல்லடி மற்றும் காத்தான்குடி பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு மற்றும் கடத்திக் கொலை உள்ளிட்ட ஐந்து தனித்தனி கொலைச் சம்பவங்கள் தொடர்பிலேயே இந்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் எனக் கூறப்படும் முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோர் சந்தேகநபர்களாக உள்ளனர்.

விசாரணையின் போது, பிள்ளையான் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் உணவு பரிசோதனை செய்யப்பட்டு தாமதமாக கிடைப்பதால் சாப்பிட முடியாத நிலை இருப்பதாகவும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயாருடன் சில நிமிடங்கள் தொலைபேசியில் பேச அனுமதி வழங்குமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த நீதவான், சிறைச்சாலை அதிகாரிகள் நடைமுறைக்கு அமைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

அதேவேளை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் முன்னிலையான அதிகாரி, பிள்ளையானை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பான விடயம் குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பிள்ளையான் உட்பட மூவரையும் எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படும் மற்றொரு சந்தேகநபருக்கு திறந்த பிடியாணையும் தொடர்ந்தும் அமலில் இருக்கும் என அறிவித்தது.

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை