தாய்லாந்தின் பூக்கெட்டிலிருந்து இந்தியாவின் புது டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா விமானம் ஒன்று, பலத்த காற்றின் காரணமாக நடுவானில் கடுமையாக குலுங்கியதில் குறைந்தது 12 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
AI2379 என்ற இந்த விமானம் தனது பயணத்தின் போது கடுமையான காற்றழுத்த மாற்றத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தகவல்களின்படி, சம்பவத்தின் போது விமானம் திடீரென சுமார் 300 அடி வரை கீழிறங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் விமானத்திற்குள் இருந்த சில பயணிகள் இலகுவான காயங்களுக்கு ஆளாகினர்.
விமானம் பாதுகாப்பாக புது டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியதைத் தொடர்ந்து, அனைத்து பயணிகளும் விமானப் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் விமான நிலைய மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சம்பவத்தின் போது விமானத்திற்குள் பதிவு செய்யப்பட்ட காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு டெல்லி–ஸ்ரீநகர் விமானம் ஆலங்கட்டி மழையால் கடுமையான காற்றழுத்தத்தில் சிக்கி சேதமடைந்த சம்பவத்திற்குப் பின்னர், மீண்டும் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமை விமானப் பாதுகாப்பு தொடர்பாக கவலையை ஏற்படுத்தியுள்ளது.
