சீனாவில் தயாரிக்கப்படும் புதிய தரவு மைய சாதனங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியைத் தொடர்ந்து, அமெரிக்காவின் முக்கிய தரவு உள்கட்டமைப்புகளை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, தரவுகளை ஃபைபர்-ஒப்டிக் கேபிள்கள் வழியாக அதிவேகமாக பரிமாற பயன்படும் 'ஒப்டிகல் டிரான்சீவர்ஸ்' எனப்படும் சீன தயாரிப்பு சாதனங்கள் மீது அமெரிக்க தகவல் தொடர்பு ஆணைக்குழு தடைகளை பரிசீலித்து வருகிறது.
சீன நிறுவனங்கள் தரவு திருட்டு, தீம்பொருள் நிறுவல் அல்லது முக்கிய சேவைகளை பாதிக்கும் சைபர் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் அபாயத்தை குறைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தடை அமல்படுத்தப்பட்டால், சீன தொழில்நுட்ப நிறுவனமான இன்னோலைட் போன்ற நிறுவனங்கள் அதிக பாதிப்பை சந்திக்கக்கூடும் என்றும், அதே நேரத்தில் அமெரிக்க கிளவுட் சேவை நிறுவனங்களின் செலவுகளும் அதிகரிக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம், சீன நிறுவனங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தடைகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றும், சீனாவின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு தகுந்த பதிலடி வழங்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
