வனவிலங்கான மலைப்பாம்பை ஏந்தியபடி மேடையில் நடனமாடிய 18 வயது இளம்பெண்ணுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் கொழும்பு 07 பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு இளவரசர் மற்றும் இளவரசி தேர்வுப் போட்டியின் போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன மற்றும் தாவரவியல் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட மலைப்பாம்பை பயன்படுத்தி மேடையில் நடனமாடியதாக இளம்பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும், அந்த மலைப்பாம்பை ரூ.25,000க்கு விற்றதாகக் கூறப்படும் 44 வயது நபருக்கும் நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
வழக்கில் தொடர்புடைய இருவரும் நீதிமன்றத்தில் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக, விசாரணையை மேற்கொண்ட வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இளம்பெண் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.50,000 அபராதத்தை உடனடியாகச் செலுத்தியதாகவும், மலைப்பாம்பை கொடுத்த நபர் அதே நாளில் அபராதத்தைச் செலுத்த முடியாததால் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அவர் ரூ.10 லட்சம் அபராதத்தைச் செலுத்தியதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில், நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட மலைப்பாம்பை அதன் இயற்கை வாழ்விடமான வில்பத்து தேசியப் பூங்காவில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
