விண்வெளியில் நெல் விளைவித்து சீனா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த ஆய்வு, எதிர்காலத்தில் நிலா, செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் நீண்ட காலம் தங்கி ஆய்வு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
கடந்த மே 24ஆம் தேதி, சென்ஜூ-23 விண்கலத்தின் மூலம் சீன விஞ்ஞானிகள் நெல் விதைகளை தியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு சுமார் இரண்டு மாதங்கள் நுண்ஈர்ப்பு விசை சூழலில் நெல் பயிரிடப்பட்டு, தற்போது அதன் மாதிரிகள் அடுத்த கட்ட அறிவியல் ஆய்வுகளுக்காக சேகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு, 2022ஆம் ஆண்டிலும் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் முதல் முறையாக நெல் வளர்ப்பு சோதனை நடத்தப்பட்டது. அந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னைய ஆய்வில் விண்வெளியில் வளர்க்கப்பட்ட நெல் மற்றும் பூமியில் வளர்க்கப்பட்ட நெல் ஆகியவற்றை ஒப்பிட்டு, நுண்ஈர்ப்பு விசை தாவர வளர்ச்சியில் ஏற்படுத்தும் மாற்றங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த ஆய்வின் முக்கிய நோக்கம், நீண்டகால விண்வெளி பயணங்களின் போது உணவுப் பொருட்களை நேரடியாக விண்வெளியிலேயே உற்பத்தி செய்ய முடியுமா என்பதை கண்டறிவதாகும்.
இந்த முயற்சி வெற்றிகரமாக தொடருமானால், எதிர்காலத்தில் நிலா அல்லது செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் தங்கியிருக்கும் காலங்களில், பூமியிலிருந்து உணவை எடுத்துச் செல்லும் தேவையை கணிசமாகக் குறைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
