தாய்லாந்தின் தென்பகுதியில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது மின்னல் தாக்கியதில், 24 வயதுடைய வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
சுங்கை கோலோக் பகுதியில் உள்ள சன்டிபாப் விளையாட்டு மைதானத்தில், சாம்கொல்ட்ஸ் மற்றும் அபு எக்ஸ் நொங் சிரின் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போட்டியின் போது சாம்கொல்ட்ஸ் அணியைச் சேர்ந்த 24 வயதுடைய வீரர் சோவ்யான் அவேய் மீது திடீரென மின்னல் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்னல் தாக்கியதும் அவர் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். சக வீரர்களும் அவசர மருத்துவக் குழுவினரும் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
எனினும், அவரை காப்பாற்ற முடியாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில், கால்பந்து வீரர் ஒருவருடன் மேலும் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயரச் சம்பவம் தாய்லாந்து விளையாட்டு வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
